அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

தமிழகத்தில் இசுலாம் - இசுலாம் II




பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே இசுலாம் மதத்தைப் பற்றிய செய்திகள் தமிழகத்தில் அறியப்பட்டிருந்தன. இசுலாம் மார்க்கத்தைப் பற்றிய சிந்தனை பலருக்கு இருந்தது. சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் ஆகிய பாண்டிய அரசர்கள் தங்களுக்குள் போராடிக் கொண்டு வடஇந்தியாவிலிருந்து மாலிக்காபூரை அழைத்தனர். மாலிக்காபூரின் வரவு தமிழகத்தில் இசுலாமிய ஆட்சிக்கு வழி வகுத்தது. இதன் விளைவாக இசுலாம் தமிழகத்தின் தென் மாநிலங்களில் ஓங்கிப் பரவியது. மதுரையை ஆண்ட சுல்தான் இபுராகிம், தமிழர்கள் இசுலாம் மதத்தில் சேரப் பெரிதும் வழி வகுத்தான். காயல்பட்டினம், கீழக்கரை, இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் வணிகம் செய்துக் கொண்டிருந்த பலர் இசுலாம் மதத்தைத் தழுவினர். படிப்படியாக இசுலாம் தமிழகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சமயமாக மாறியது.
இசுலாமியத் தமிழர்
இசுலாம் மதத்தின் உயர் கொள்கைகள் சமத்துவம், சகோதரத்துவம் என்பன. வைதிக சமயத்தின் பல சமயக் கடவுட் கோட்பாடு, பிற சமய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக் கொடுமை ஆகியன தமிழர்களுடைய உள்ளத்தில் வருத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தபோது சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதித்த இசுலாம் தமிழர்களைக் கவர்ந்தது. தமிழர்களே இசுலாமியர்களாக மாறியதால் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஒரு புதிய மதமாக இல்லாமல் ஒரு மார்க்கமாகவே திகழ்ந்தது என்றும் கூறுவர். மஸ்தான் சாகிபு பாடல்களும், தாயுமானவர் பாடல்களும் பொது நிலையிலும் வேறுபாடு காண இயலாது.
"குணங்குடியான் தனைப் பரவினார்க்குப்
பவப் பிணி நீங்கும்"
அதாவது, குணங்குடி மஸ்தான் சாகிபை வழிபட்டவர்க்குப் பிறவியாகிய நோய் நீங்கும் என்று இந்து சமயத்தைச் சார்ந்த சரவணப்பெருமாள் ஐயர் பாடுகின்றார். "குருவினொடு தெய்வம் நீயே" என வேங்கடராய பிள்ளைக்கவிராயர் போற்றுகின்றார். குணங்குடி மஸ்தான் சாகிபு போன்ற இசுலாமியத் தமிழர் பலர் வாழ்ந்த பெருமைக்குரியதாகத் தமிழ்நாடு திகழ்ந்தது.
இசுலாமியர் பணிகள்
தமிழில் காப்பியங்கள், மெய்ஞ்ஞான இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பலவகையான படைப்புகளை இசுலாமியர் படைத்தனர். பல புதிய வகையான இலக்கியங்களையும் உருவாக்கினார். இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் எண்ணிக்கையில் பல நூறாகத் திகழ்கின்றன. அரபு, பாரசீக, உருதுச் சொற்கள் தமிழில் நிறையக் கலந்ததற்கு இசுலாமே காரணமாகும். கிஸ்தி, மகசூல், பசலி, பட்டா, மிராசு, தாசில்தார், மனு, கஜானா, ஜமாபந்தி, வாரிசு, நமுனா போன்ற நிர்வாகச் சொற்கள் பல தமிழில் வந்து கலந்ததற்கு இசுலாமிய சமயம் தழுவிய ஆட்சிகள் காரணமாகும்.
  • காப்பியங்கள்
  • இசுலாமியக் காப்பியங்களில் மிகவும் புகழ்பெற்றதுசீறாப்புராணமாகும். இதனை இயற்றியவர் உமறுப்புலவர் ஆவார். வள்ளல் சீதக்காதியின் தூண்டுதலால் உமறுப்புலவர் இந்தக் காப்பியத்தை இயற்றினார். தமிழிலக்கிய வரலாற்றில் பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரை பெரும் காப்பியங்கள் தோன்றவில்லை. இந்தக் குறையை நீக்கும் வகையில் பதினேழாம் நூற்றாண்டில் சீறாப்புராணம் தோன்றியது. இந்நூல் 5027 பாடல்களைக் கொண்டது. சீறாப்புராணத்தைத் தவிர குத்துபநாயகம், திருக்காரணப்புராணம், தருமணிமாலை ஆகிய காப்பியங்களும் தமிழில் தோன்றின.
    சிற்றிலக்கியங்கள்
    தமிழில் அந்தாதி, உலா, கலம்பகம், கோவை, மாலை, பரணி, தூது போன்ற சிற்றிலக்கியங்கள் உள்ளன. இந்தச் சிற்றிலக்கியங்களுக்குரிய மரபைத் தழுவி இசுலாமியரும் பலப்பல சிற்றிலக்கியங்களைத் தந்துள்ளனர். மக்காக் கலம்பகம், மதினாக் கலம்பகம், நாகூர்க் கலம்பகம் போன்ற கலம்பகங்களும், நபிநாயகம் பிள்ளைத் தமிழ், முகைதீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் போன்ற கோவை தொகுப்பு நூல்களும் நாகை அந்தாதி, மதீனத்து அந்தாதி, திரு மக்கா திரிபு அந்தாதி ஆகிய அந்தாதிகளும், இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள் படைத்த அந்தாதிச் செல்வங்களாகும். இவற்றைத் தவிர கிஸ்சா, படைப்போர், மசலா, முனா ஜாத்து, நாமா என்ற புதிய வகைச் சிற்றிலக்கியங்களையும் இசுலாமியத் தமிழர் படைத்தனர். கிஸ்சா என்பது கதை சொல்லுதல் என்ற பொருள் கொண்டதாகும். படைப்போர் என்பது வீரப்போர்ப்பாட்டு ஆகும். மசலா என்பது வினா விடை வடிவமான இலக்கியமாகும். முனாஜாத்து என்பது இறைவனோடு இரகசியமாகப் பேசுதல் என்ற பொருள் உடையதாகும். நாமா என்பது இறைவனின் பெருமையைப் பலபடப் பாடுவதாகும்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    Blogger Widgets

    Subscribe via email

    Enter your email address:

    Delivered by FeedBurner

    Jumma mosque, Vadamadurai