அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

திங்கள், 30 ஜனவரி, 2012

திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு - திருக்குர்ஆன்

திருக்குர்ஆனை அதிகம் ஓதுவதற்கு முயற்சி செய்யுங்கள். குறிப்பாக இந்தப் புனிதமிகு ரமலான் மாதத்தில்தான் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. இந்த மாதத்தில் திருக்குர்ஆனை அதிகம் ஓதுவது சிறப்பிற்குரியது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு தடவை ஓதிக்காட்ட நபி அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.



ஆனால் எந்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்களோ, அந்த ஆண்டு மனதில் நன்கு பதிய வைப்பதற்காகவும், உறுதிப்படுத்துவதற்காகவும் இரண்டு தடவை ஓதிக் காட்டினார்கள். நல்லோர்களான நம்முன்னோர்கள் ரமலான் மாதத்தில் தொழுகையிலும், வெளியிலும் குர்ஆனை அதிகம் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.

குர்ஆன் ஓதுவது என்பது இரண்டு வகைப்படும் : திலாவா ஹக்மிய்யா, திலாவா லஃப்ளிய்யா.

திலாவா ஹக்மிய்யா என்றால், குர்ஆனின் செய்திகள் உண்மையென ஏற்பதும் அதன் சட்டங்களை அமுல்படுத்துவதுமாகும். அதன் ஏவல்களைச் செய்வதன் மூலமும், அதன் விலக்கல்களை விட்டு விலகுவதன் மூலமும் அதனைப் பின்பற்றுதலைக் குறிக்கும்.

திலாவா லஃப்ளிய்யா என்றால், கிராஅதுல் குர்ஆன் என்கிற ஓதுதலாகும். இதன் சிறப்பு குறித்து, ஏராளமாக குர்ஆனின் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன. குர்ஆன் முழுவதையும் ஓதுவதன் சிறப்பு குறித்தும், குறிப்பிட்ட அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு குறித்தும் அவை பேசுகின்றன.

குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது தன்னை ஓதக் கூடியவர்களுக்கு மறுமை நாளில் பரிந்துரை செய்யக் கூடியதாக வரும் எ‌‌ன்று ந‌பி (‌ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கூ‌‌றினா‌ர்க‌ள்.

எந்த ஒரு குழுவினர் அல்லாஹ்வுடைய பள்ளிவாசலில் ஒன்று கூடி குர்ஆனை ஓதுகிறார்களோ மேலும் தங்களுக்கிடையே அதனை ஆய்வு செய்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயம் அமைதி இறங்குகிறது. அவர்களைக் கருணை சூழ்கிறது. மேலும் அவர்களை மலக்குகள் வளைந்து கொள்கிறார்கள். அல்லாஹ் அவர்களைப் பற்றி தன்னிடம் உள்ளவர்களிடம் எடுத்துரைக்கின்றான்.

குர்ஆனைத் தொடர்ந்து ஓதி வாருங்கள். எனது உயிர் யார் கை வசம் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! இந்தக் குர்ஆன் (தொழுவத்தில்) கட்டப்பட்டுள்ள ஒட்டகத்தை விட வேகமாக பிய்த்துக் கொண்டு ஓடக் கூடியதாக இருக்கிறது.


உங்களில் எவரும் இந்த ஆயத் - வசனத்தை நான் மறந்து விட்டேன் எ‌ன்று சொல்ல வேண்டாம். உண்மையில் அவர் தான் மறக்கடிக்கப்பட்டார் 

நான் மறந்து விட்டேன் என்பதன் காரணம், குர்ஆனில் அவர் மனனம் செய்திருந்தவை குறித்து அவர் பொடுபோக்காக இருந்து விட்டார். அதை மறந்து விடும் அளவுக்கு அவர் அலட்சியத்துடன் இருந்திருக்கின்றார் என்பதையும் காட்டுகின்றது. அதாவது குர்ஆனுக்கும் அவருக்கும் தொடர்பின்மையைக் காட்டுகின்றது.

நிச்சயமாக இ‌ந்தக் குர்ஆன் அல்லாஹ்வின் விருந்துபச்சாரமாகும். அவனது விருந்துபச்சாரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். திண்ணமாக இந்தக் குர்ஆன் அல்லாஹ்வின் உறுதியான கயிறு, தெளிவான ஒளி, பயனுள்ள நிவாவரணியாகும். இந்தக் குர்ஆனை யார் பற்றிப் பிடித்து நிற்கிறாரோ அவருக்குப் பாதுகாப்பாகவும், அதைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கு ஈடேற்றமாகவும் திகழ்கிறது. அதை ஓதுவதன் மூலம் ஒன்றுக்கு பத்து நன்மை என இறைவன் கூலி வழங்குவான். அல்லாஹ்விடம் கூலியையும் அவனது உவப்பையும் எதிர்பார்த்து யார் ஓதினாலும் அவர்களின் கூலி குறையாது. குறைவான அமல்களுக்கு ஏராளமான கூலிகள். நிவர்த்தி செய்ய முடியாத அந்த மறுமை நாளில் லாபம் ஈட்டத் தவறியவன் யாரோ அவன் தான் நஷ்டம் அடைந்தவன்.

பகல்-இரவு எல்லா நேரங்களிலும் எந்த அமல்கள் இறைவனோடு உங்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துமோ அந்த அமல்களைச் செய்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதுங்கள். ஆயுட்காலம் வேகமாகச் சுருட்டப்படுகின்றது. காலங்கள் அனைத்தும் எவ்வாறு கழிந்து செல்கிறதெனில் பகலின் சில மணி நேரங்கள் கழிந்தது போன்றே தோன்றுகின்றது. 


யா அல்லாஹ்! உனது வேதத்தை உனக்குத் திருப்தி அளிக்கும் வகையில் ஓதுகின்ற பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! அதன் மூலம் எங்களை ஈடேற்றப் பாதையில் செலுத்துவாயாக! இருள்களிலிருந்து எங்களை வெளியேற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வருவாயாக! மேலும் குர்ஆனை எங்களுக்குப் பாதகமாக அன்றி சாதகமாக ஆக்குவாயாக! அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனே!

யா அல்லாஹ்! இந்தக் குர்ஆன் மூலம் எங்களது அந்தஸ்தை உயர்த்துவாயாக! மேலும் இதன் மூலம் எங்களை விட்டும் தீமைகளைப் போக்குவாயாக! உனது கருணையினால் எங்களுக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும், கருணையாளர்களில் எல்லாம் கருணையாளனே! பாவமன்னிப்பும் வழங்குவாயாக!

யா அல்லாஹ்! எங்களுடைய நோன்புகளைப் பாதுகாப்பாயாக! எங்களுக்குப் பரிந்துரை செய்யக் கூடியதாக அவற்றை ஆக்கியருள்வாயாக! மேலும் எங்கள் பாவங்களையும், எங்கள் பெற்றோர் பாவங்களையும் அனைத்து முஸ்லிம்களின் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக!

-குள‌ச்ச‌ல் சாதி‌க

வெள்ளி, 27 ஜனவரி, 2012

திருக்குர்ஆன் திருப் பெயர்கள் -திருக்குர்ஆன்

“குர்ஆன்” என்று பதினைந்து இடங்களிலும், “அல் குர்ஆன்” என்று ஐம்பது இடங்களிலும், குர்ஆன் மஜீதில் திருக் குர்ஆன் பெயரை அல்லாஹ் கூறுகிறான். இன்னும் பல பெயர்களிலும் இது திருமறையில் குறிப்பிடப்படுகிறது. அப்பெயர்கள் வருமாறு:

எண் குர்ஆனின் பெயர்கள் வசன
எண்
1 அல் கிதாப் (திருவேதம்) 2:2
2 அல் பயான் (தெளிவான விளக்கம்) 3:138
3 அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி) 4:174
4 அல்ஃபுர்கான் 2:185
5 அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) 3:58
6 அந் நூர் (பேரொளி) 4:174
7 அல் ஹக்கு (மெய்யானது) 2:91
8 அல் கரீம் (கண்ணியமானது) 56:77
9 அல் முபீன் (தெளிவானது) 5:17
10 அல் ஹகீம் (ஞானம் மிக்கது) 36:2
11 அல் அஜீஸ் (சங்கையானது வல்லமையுடையது) 41:41
12 அல் ஹுதா (நேர் வழிகாட்டி) 3:138
13 அர் ரஹ்மத் (அருள்) 6:157
14 அஷ் ஷிஃபா (அருமருந்து) 10:57
15 அல் மவ்இளத் (நற்போதனை) 3:138
16 அல் ஹிக்மத் (ஞானம் நிறைந்தது) 2:151
17 அல் முஹைமின் (பாதுகாப்பது) 5:48
18 அல் கய்யிம் (உறுதியானது நிலைபெற்றது) 2:151
19 அந் நிஃமத் (அருட்கொடை) 93:11
20 அர் ரூஹ் (ஆன்மா) 42:52
21 அத் தன்ஸீல் (இறக்கியருளப் பெற்றது) 20:4
22 அல் ஹுக்மு (சட்ட திட்டங்கள்) 13:37
23 அல் முபாரக் (நல்லாசிகள்) 6:92
24 அல் முஸத்திக் (முன்னர் வந்த இறை வேதங்களை மெய்ப்பிப்பது) 6:92
25 அல் பஷீர் (நன்மாராயங் கூறுவது) 41:4
26 அந் நதீர் (அச்சமூட்டி எச்சரிப்பது) 41:4
27 அல் முதஹ்ஹர் (பரிசுத்தமானது) 80:14
28 அல் முகர்ராமா (சங்கையானது) 80:13
29 அல் மஜீத் (கண்ணியம் மிக்கது) 50:1
30 அல் அரபிய்யு (அரபி மொழியிலுள்ளது) 12:2
31 அல் மர்ஃபூஆ (உயர்வானது) 80:14
32 அல் அஜப் (ஆச்சரியமானது) 72:1
33 அல் பஸாயிர் (அறிவொளி) 7:203
34 அல் திக்ரா (நல்லுபபேதசம்) 7:2
35 ஹப்லுல்லாஹ் (அல்லாஹ்வின் கயிறு) 3:103
நன்றி :http://www.tamililquran.com

செவ்வாய், 24 ஜனவரி, 2012

அல்லாஹ்! சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ்


بسم الله الرحمن الرحيم

முஸ்லிமான மற்றும் முஸ்லிமல்லாத (மாற்றுமத) அன்புச் சகோதர, சகோதரிகளே தங்கள் அனைவருக்கும் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்தஹு (தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)
இறை விசுவாசிகளே! நாம் சம்பாதிக்கவேண்டும், உயர்ந்த மாளிகைகளைப் போன்ற வீடுகளை கட்ட வேண்டும் அதில் அழகிய துணைகளுடனும் வாரிசுகளுடனும் குடிபுக வேண்டும் என்று சிந்திப்போம் அதற்கான திட்டங்கள் தீட்டி அதை நடைமுறைப் படுத்துவோம் அதில் சிலருக்கு அல்லாஹ் வெற்றி அளிப்பான் மற்றும் சிலருக்கு தோல்வியளிப்பான்.
தங்கள் எண்ணங்களில் வெற்றிபெற்றவர்கள் அல்லாஹ்வின் கிருபை கிடைத்து விட்டதாக எண்ணி ஆனந்தமாக இருப்பார்கள் மற்றும் சிலரோ தன் எண்ணங்களில் தோல்வியடைந்தவர்களாக விரக்தியடைந்தும் அல்லாஹ்வின் கிருபை கிடைக்கவில்லை என்று எண்ணி சலிப்படைந்து வாழ்ந்து வருவார்கள்.
சகோதரர்களே! சிந்தித்துப்பாருங்கள் நாம் எங்கே இருக்கின்றோம்! பணம், பொருள், மனைவி மக்கள், வசதிவாய்ப்புகள் இவைகள்தான் நமக்கு அல்லாஹ்விடம் கிடைத்த அருட்கொடைகளா?
அல்லாஹ் நமக்கு ஏதோ ஒன்றை அருளிவிட்டால் உடனே ”அர்ரஹ்மான்! அர்ரஹ்மான்” என்று கூறுகிறோம்! ஆனால் நாம் நினைத்தது நடக்காமல் போகும்பட்சத்தில் சோகமே உருவானதாக எண்ணிக் கொண்டு அல்லாஹ்வைத் தவிர வேறு ஏதாவது ஒரு சக்தி கைகொடுக்குமா? என்று ஏங்கி அதைத் தேடும் பாதைகளில் அமர்ந்துவிடுகிறோம்!
ஏன் நீங்கள் நினைத்ததை அல்லாஹ் நிச்சயம் நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களா? இப்படி நீங்கள் நினைத்து விடாதீர்கள் காரணம் நீங்கள் இப்படி நினைத்துவிட்டால் இது பாவங் களிலேயே மிகப்பெரிய பாவமாக மாறிவிடும் மேலும் ”அல்லாஹ்வுக்கு நாம் அடிமை” என்ற கொள்கை தலைகீழாக மாறிவிடும்! (அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டும்).
சகோதரர்களே இந்த உலக வாழ்கை பற்றி அல்லாஹ் கூறும் போது
“இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை” (ஆலஇம்ரான்:185)
 மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணுமேயன்றி (வேறு) இல்லை. இன்னும் பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமையின் வீடு மேலானதாகும்” (அல்அன்ஆம்: 32)
அல்லாஹ் நம்மை துரத்தி துரத்தி உதவிக் கொண்டிருக்கிறான் நாம் அதை சிந்திப்பதில்லையே!
சகோதரர்களே நீங்கள் இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள் சற்று தங்களைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்!
சென்ற வினாடி நாம் எங்கே இருந்தோம்
சென்ற வாரம் நாம் எங்கே இருந்தோம்
சென்ற மாதம் நாம் எங்கே இருந்தோம்
சென்ற வருடம் நாம் எங்கே இருந்தோம்
பிறப்பதற்கு முன் நாம் எங்கே இருந்தோம்
(குழப்பமாக இருக்கிறதா? இதுதான் வாழ்க்கை!)
நம்மை பாலூட்டி, அறிவுட்டி வளர்த்த அருமைத் தாய் கர்ப்பம் தறிக்கும் முன் நாம் அற்பத்திலும் அற்பமான ஒரு கொசுவின் சடலமாக கூட இருக்கவில்லையே! அதைவிட கொடுமை ஒரு சூனியமாக (புஜ்ஜியமாக) கூட இருக்கவில்லையே! இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் நாம் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நம் தாயின் வயிற்றில் ஒரு அற்பமான நீர்த்துளியால் (இந்திரியத்துளியாக) நம்மை செலுத்தி அந்த நீர்த்துளிக்குள் நம் உயிரை ஊதினானே! அவன் ரஹ்மானில்லையா?
தாயின் வயிற்றில் நம்மை ஒப்படைத்து உதவினானே!
உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து. (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே, சிந்தித்து விளங்கிக் கொள்ள கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்கள் விவரித்துள்ளோம் (திருக்குர்ஆன் 6:98)
நம் உயிருக்கு உடல் கொடுத்து உதவினானே!
அவன்தான் கர்ப்ப கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை, அவன் யாரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான் (திருக்குர்ஆன் 3:6)
தாயின் கர்ப்பப் பையில் நம் உயிரை கண்காணித்து உதவினானே! ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப் பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.  ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது (திருக்குர்ஆன் 13:8)
வளரும் பருவத்தில் நமக்கு கல்வி அறிவைக் கொடுத்தானே!
”(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும், உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாத வற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.” (திருக்குர்ஆன் 96:5)
நமக்கு வாழ வழிவகை செய்து ஆற்றலை கொடுத்தானே!
நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை
நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன்
அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். (திருக்குர்ஆன் 16:14)
நமக்கு ஆற்றல் மட்டும் போதுமா என்று எண்ணி நம் ஆற்றலுக்கு உதவியும் செய்தானே!
அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று)  வெளிப் படுத்தப்படுவீர்கள்.  (திருக்குர்ஆன் 43:11)
மனிதர்களுக்கு குறைகளும் கொடுத்தான் அந்த குறைகளால் நிறைகளும் கொடுத்தானே!
சகோதரர்களே, அல்லாஹ் சிலர் சிலருக்கு உடலளவில் குறைபாடுகள் கொடுத்தான் ஆனால் நாமோ இந்த குறைபாடுகளை கண்டு ஏன் இவர்களை இவ்வாறு இறைவன் படைத்தான் என்று எண்ணிக் கொண்டிருப்போம்! ஆனால் அல்லாஹ்வோ யாருக்கு குறைகள் கொடுத்தானோ அவர்களுக்கு நிறைகளையும் கொடுத்து உதவுகிறானே! சிந்தித்துப்பாருங்கள்!
கண்பார்வை இல்லாதவர்கள் எதனையும் காண முடியாது இது அவர்களுக்கு உள்ள குறை அதே வேளையில் காதுகளில் நுண்ணறிவோடு கேட்கும் சக்தி அதிகமாக்கித்தந்தானே!
இதைவிட சிறந்த உதவியாக கண்பார்வையற்றவர்கள் கண்களின்
விபச்சாரத்திலிருந்து பாதுகாப்பு பெறுகிறார்களே! மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது கண்களுக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?
காது கேளாதோருக்கு கேட்கும் திறன் குறைவாக இருக்கும் இவ்வாறு உள்ளவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்குமே! அதே வேளையில் காது கேளாதவர்கள் தீய வார்த்தைகளை கேட்காமல் தீய பாடல்களை கேட்காமல்
இருப்பதானல் மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது செவிக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?
வாய்பேச முடியாத ஊமைகள் இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் வாய்களினால் எதனையும் பேச முடியாது ஆனால் அதே நேரம் அவர்கள் புறம் பேசுதல் போன்ற எந்த கெட்ட வார்த்தைகளையும் பேச முடியாதே அவர்களுக்கு மஹ்ஷரில் அவர்களின் வாய்க்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?
சகோதரர்களே! பிறக்கும் குழந்தைகளிலோ அல்லது ஏதாவது விபத்திலோ சிலருக்கு புத்தி சுவாதீனம் இல்லாமல் பைத்தியமாக இருப்பார்கள் அவர்கள் நிலையைக் கண்டால் நம்மில் சிலருக்கு பைத்தியம் என்று எண்ணி மனதளவில் சிரிப்பு வரும் ஆனால் இவர்களுக்கு உள்ள அருட்கொடைகளை எண்ணிப்பார்த்தால் நமக்கு வருத்தமளிக்கும் காரணம் இவர்கள் பிறவியிலேயே புத்திசுவாதீனமற்றவர்களாக இருந்தால் கேள்விக்கணக்கே இருக்காதே!  மேலும் இடையில் ஏதாவது விபத்துக்களால் புத்திசுவாதீனம் ஏற்பட்டால் அன்று முதல் அவர்கள் தன்னை
அறியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்குமே!  மேலும் மஹ்ஷரில் இப்படிப்பட்டவர்களின் உள்ளத்திற்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா!
இதையே திருமறை இவ்வாறு கூறுகிறது நாம் தான் சிந்திக்க தவறுகிறோம்
‘நிச்சயமாக செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்தும் (மறுமை நாளில்) விசாரிக்கப்படும்.. (திருக்குர்ஆன் 17:36)
சகோதரர்களே! இதை செவி தாழ்த்திக் கேளுங்கள்!
சகோதரர்களே நம்மில் சிலர் நம்மை வீடு தேடி வந்து உலகில் உயர்ந்த பொருள் (அல்லாஹ்வின் பார்வையில் அர்ப்பமான பொருள்) கொடுத்து உதவுவார்கள் அதற்கு பிரதிபலனாக உங்களிடம் உள்ள பொருள், பொன், ஆன்மக்கள், பெண் மக்கள்,
நற்பெயர் போன்ற எதையாவது எதிர்பார்ப்பார்கள் ஆனால் அல்லாஹ் உங்களுக்கு கிடைத்தற்கரிய உயிரை கொடுத்தான், உங்களுக்கு நிலத்திலும் உதவுகிறான்! நிலவிலும் உதவுகிறான்! காற்றில் பயணிக்கும் போதும் உதவுகிறான்! கடலில்
பயணிக்கும் போதும் உதவுகிறான்!
ஏன் உங்களால் முடிந்தால் நீங்கள் பாம்பு பொந்துக்குள் ஓடி
ஒழிந்துக்கொண்டாலும் அங்கும் சுவாசக் காற்றை கொடுத்து உதவுவானே! நீங்கள் நிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கத்தை வெட்டி எடுக்க முனைந்தாலும் அங்கும் காற்றை, நீர் மற்றும் உணவை கொடுத்து உதவுகிறானே! ஏன் நீங்கள் மரணித்தால்
நல்லவராக இருந்தால் கப்ருக்கடியில் சுவனத்தின் கதவை திறந்துவிட்டு என் அடியான் உறங்கட்டும் என்று ஆசைப்படுகிறானே!!! அல்லாஹ் ரஹ்மானில்லையா?  ரஹ்மத்துல் ஆலமீன் இல்லையா?
ஆனால் மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வின் உதவி கிடைக்காவிட்டால் உடனே விக்ரஹத்தையும் சமாதிகளையும் வணங்குகிறோம் அவைகள் உதவும் என்று எண்ணிக்
கொள்கிறோம் இது அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் துரோகமில்லையா? இது படைத்த ரப்புல் ஆலமீனுக்கு எதிராக நாம் செய்யும் பாவமில்லையா? இது முறையா?
சிந்தியுங்கள் சகோதரர்களே உங்களுக்கு அளித்த அருட் கொடைகளுக்கு பகரமாக அல்லாஹ் உங்களிடம் என்ன கேட்கிறான்! வாடகையா? கூலியா? உணவா? உடையா? கட்டணமா? ஒன்றுமில்லையே! மாறாக கீழே உள்ள ஒன்றைத்தானே அவன் கேட்கிறான்!
உங்கள் இறைவன் கூறுகிறான்; ”என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக் கிறேன்;  எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமை யடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்
தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”( திருக்குர்ஆன் 40:60)
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச்சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (திருக்குர்ஆன் 75:37)
நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (திருக்குர்ஆன் 40:61.)
அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலதாருக்கெல்லாம்
இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியடையவன். (திருக்குர்ஆன் 40:64)
அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை – ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் – அனைத்துப் புகழும் அகிலங்கள்
எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும். (திருக்குர்ஆன் 40:65)
(நபியே!) கூறுவீராக ”என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை
விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் – அன்றியும் – அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று
கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்.” (திருக்குர்ஆன் 40:66)
சகோதர, சகோதரரிகளே நாம் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்!
அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் கைமாறு செய்யப்பட முடியாத உதவிகளையும் கொடுத்த அல்லாஹ்விற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா? அல்லது பேசினால்
பதிலளிக்காது!. கேட்டால் கொடுக்காத! ஏன் உங்களை திரும்பிக்கூட பார்க்காத ஏதாவது ஒன்றிற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா?
உங்களுக்கு சிறு உதவி இதோ!
அல்லாஹ்வின் அருட்கொடைகளை படித்தீர்கள் அந்த அல்லாஹ்விடம் எனக்கு எது உண்மை எது பொய் என்று புறியவில்லை என் மூதாதையர்களின் வழியில் நான்
இருக்கின்றேன் எனக்கு விக்ரஹ மற்றும் தர்கா வழிபாடுகளை விட்டுவிடு என்று கூறுவது புதிதாக உள்ளது மேலும் கஷ்டமாக உள்ளது எனவே எனக்கு எது உண்மை எது போலி என்று இணம் காட்டி நேர்வழி காட்டுவாயா? நான் பின்பற்றுகிறேன் என்று
கண்ணீர்மழ்க கேட்டுப்பாருங்கள்! விந்துத்துளியாக இருந்த உங்களுக்கு உயிரை ஊதிய உங்கள் அல்லாஹ் (இன்ஷா அல்லாஹ்) உங்களுக்கு நேர்வழி காட்டி சுவனத்தைகூட அளிப்பான்!
நீங்கள் வணங்கும் விக்ரஹ்மோ அல்லது கப்ரோ உங்களுக்கு சுவனத்தை அளிக்குமா? யார் யாருக்கோ சிந்திப்பீர்கள் சற்று உங்களுக்காக! சிந்தித்துப்பாருங்கள் நேர்வழி கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்) உங்கள் முடிவு உங்கள் கையில்! ஸலாம்
இறுதியாக அல்லாஹ்வின் வார்த்தை ஒன்றைச் சொல்லிக் கொண்டு இந்த மடலை முடித்துக்கொள்கிறேன்!
 என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்”  (என்பதைக் கூறுவீராக!) (திருக்குர்ஆன் 2:186)
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே)
அன்புடன் உங்கள் சகோதரனாக!
அல்லாஹ்வின் அடிமை
நன்றி: Islamic Paradise

திங்கள், 23 ஜனவரி, 2012

அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் - அல்லாஹ்


அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்:

முதல் அடிப்படை:   

 அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி வந்துள்ள அல்குர்அன் வசனங்களையும் நபிமொழிகளையும் அணுகும் முறை.
அல்குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் பொறுத்தவரை அவை தருகின்ற வெளிப்படையான கருத்திலேயே அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது. ஏனெனில் அல்குர்ஆன் அரபி மொழியிலேயே அருளப்பட்டுள்ளது. அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் அரபு மொழியையே பேசினார்கள்.

 அல்குர்ஆனும் நபிமொழிகளும் தருகின்ற வெளிப்படையான கருத்துக்களை விட்டுவிட்டு அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் கற்பிப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுவதாக அமையும். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

 'வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும் இரகசியமானதையும் எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே இறைவன் தடுத்துள்ளான் என (நபியே!) கூறுவீராக!' (அல்-அஃராப் 7:33) என்று அல்லாஹ் கூறுகிறான்.
   
 மேற்கூறப்பட்ட அடிப்படையைப் பின்வரும் உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

    بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنفِقُ كَيْفَ يَشَاء
   
 'மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்' (அல்-மாயிதா 5:64)

இந்த வசனத்தில் ' யதானி ' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரபு மொழியில் யதானி என்பதன் பொருள் ' இரு கைகள் ' என்பதாகும்.

எனவே இவ்வசனத்திலிருந்து அல்லாஹ்வுக்கு இருகைகள் இருப்பதாகவே விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு மாற்றமாக ' கை ' என்பதற்கு ' சக்தி ' என்று விளக்கம் கொடுப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதாகவே அமையும்.

இரண்டாவது அடிப்படை:

    அல்லாஹ்வுடைய பெயர்கள் தொடர்பானது.

 1. அல்லாஹ்வுடைய திருநாமங்கள் அமைத்தும் அழகியவை, அழகின் சிகரத்தில் உள்ளவை, அதில் எந்தக் குறையும் கிடையாது. அவை கூடவே பண்புகளையும் கொண்டிருக்கின்றன.

    'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன'. (அல்-அஃராப் 7:180)

    உதாரணமாக ' அர்ரஹ்மான் ' (அளவற்ற அருளாளன்) என்ற திருநாமத்தைக் குறிப்பிடலாம். இந்தப் பெயர் கூடவே ' அருள் ' என்ற பண்பையும் கொண்டிருக்கிறது.
    
அதேவேளை 'காலத்தைத் திட்டாதீர்கள். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் காலமாவான்' (முஸ்லிம் - 2246) என்ற ஹதீஸை வைத்து ' அத்தஹ்ரு ' (காலம்) என்பது அல்லாஹ்வுடைய திருநாமங்களில் ஒன்று என்று கூற முடியாது. ஏனெனில் இந்தச் சொல் அழகின் உச்சத்தையுடைய ஒரு பொருளை தருவதாக இல்லை. எனவே இந்த ஹதீஸின் கருத்து, 'காலத்தை இயக்குகிறவன் அல்லாஹ்' என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
    
ஹதீஸில் குத்ஸியில் அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
    'எனது கையிலேயே அதிகாரம் இருக்கிறது. நானே இரவையும் பகலையும் மாறிமாறி வரச் செய்கிறேன்'. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (7491), முஸ்லிம் (2246)

    2. அல்லாஹ்வின் திருநாமங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையைக் கொண்டவையல்ல.

    'யா அல்லாஹ்! உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய், அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய், அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய், அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்கள்: அஹ்மத், இப்னு ஹிப்பான், ஹாக்கிம், - சில்ஸிலா ஸஹீஹாவில் ஷேய்க் அல்பானீ (ரஹ்) அவர்கள் இதனை ஸஹீஹ் என்று குறிப்பிடுகிறார்கள். ஹதீஸ் எண் - 199)
  
  அல்லாஹ் தனது மறைவானவை பற்றிய ஞானத்தில் வைத்திருக்கும் அவனது பெயர்களின் எண்ணிக்கையை அவனைத் தவிர வேறு எவராலும் அறிந்து கொள்ள முடியாது.
  
  'நிச்சயமாக அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றை யார் சரிவர அறிந்து கொள்கின்றாரோ அவர் சுவனம் நுழைவார்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி (6410), முஸ்லிம் (2677))
  
 இந்த ஹதீஸ் மேற்படி ஹதீஸுடன் எந்த வகையிலும் முரண்பட மாட்டாது. ஏனெனில் இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99 தான் என்று வரையறை செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
   
 3. அல்லாஹ்வின் திருநாமங்கள் அறிவினடிப்படையில் அமைந்தவையல்ல. மாறாக அவை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக் கொண்டு தான் அமையும். எனவே அவற்றில் கூட்டல், குறைத்தல் கூடாது. அல்லாஹ் தனக்குத் தாமாக சூட்டிக்கொண்ட, அல்லது நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு இருப்பதாகச் சொன்ன) பெயர்களே தவிர புதிதாக அவனுக்குப் பெயர்களை உருவாக்குவதோ, அல்லது அவன் தனக்கு சூட்டிக் கொண்ட பெயர்களை மறுப்பதோ பெரும் குற்றமாகும்.
    
4. அல்லாஹ்வுடைய திருநாமங்கள் ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் தாத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. அத்துடன் அது கொண்டிருக்கும் பண்பையும் அறிவிக்கிறது.

மூன்றாவது அடிப்படை:

    அல்லாஹ்வுடைய பண்புகள் (ஸிபத்துக்கள்) பற்றியது
.
    1. அல்லாஹ்வுடைய பண்புகள் அனைத்தும் உயர்ந்தவை, பூரணமானவை, புகழுக்குரியவை. அவை எந்தக் குறைபாடும் கிடையாது.
    வாழ்வு, அறிவு, ஆற்றல், கேள்வி, பார்வை, ஞானம், அருள், உயர்வு போன்ற பண்புகளை உதாரணமாகக் கூறலாம்.
   
 'அல்லாஹ்வுக்கோ உயர்ந்த பண்பு உள்ளது' என்று அல்லாஹ் கூறுகின்றான். (அந்நஹ்ல்16:60)
    
அல்லாஹ் பூரணமானவன் எனவே அவனது பண்புகளும் பூரணமாக இருக்க வேண்டும்.
    
ஏதாவது ஒரு பண்பு (ஸிஃபத்) பூரணத்துவம் இல்லாமல் குறைபாடுடையதாக இருந்தால் அது அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடாத ஸிஃபத்தாகும். மரணம், அறியாமை, இயலாமை, செவிடு, ஊமை போன்ற பண்புகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

    
அல்லாஹ் தன்னைக் குறைபாடுடைய ஸிபத்துக்களால் வர்ணிப்பவர்களைக் கண்டிக்கிறான். அத்துடன் குறைகளிலிருந்து தன்னைப் பரிசுத்தப்படுத்துகிறான்.
'ரப்பு' என்ற நிலையில் இருக்கும் அல்லாஹ் குறைபாடுடையவனாக இருப்பது அவனது ருபூபிய்யத்தைக் களங்கப்படுத்தி விடும்.
    
ஏதாவது ஒரு ஸிஃபத் ஒரு பக்கம் பூரணமானதாகவும் இன்னொரு பக்கம் குறைபாடு உள்ளதாகவும் இருந்தால் அந்தப் பண்பு அல்லாஹ்வுக்கு இருக்கிறது என்றோ அல்லது இருக்கக் கூடாது என்றோ ஒட்டு மொத்தமாகக் கூறக்கூடாது. மாறாக அதனைத் தெளிவு படுத்த வேண்டும். அதாவது அந்தப் பண்பு பூரணமாக இருக்கும் நிலையில் அது அல்லாஹ்வுக்குரிய பண்பு என்றும் குறைபாடுடையதாக இருக்கும் போது அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடாத பண்பு என்றும் கூற வேண்டும்.
    
உதாரணமாக, (المكر) மக்ர் (சூழ்ச்சி செய்தல்) (الخدع) கதஃ (ஏமாற்றுதல்) போன்ற பண்புகளைக் குறிப்பிடலாம்.
   
 'யாராவது சூழ்ச்சி செய்தால் பதிலுக்கு சூழ்ச்சி செய்தல்' என்ற நிலையில் வரும்போது அது பூரணத்துவத்தை அடைகிறது. ஏனெனில் சூழ்ச்சி செய்தவனை எதிர் கொள்ள முடியாத அளவு பலவீனன் அல்ல என்ற கருத்திலேயே இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறல்லாமல் சூழ்ச்சி செய்தல் என்பது குறைபாடான ஒரு பண்பாகும்.
    
முதல் நிலையில் இப்படிப்பட்ட பண்புகள் அல்லாஹ்வுக்கு இருக்க வேண்டிய பண்புகளாகவும் இரண்டாவது நிலையில் இருக்கக் கூடாத பண்புகளாகவும் காணப்படுகின்றன.
    
இந்தக் கருத்திலே தான் பினவரும் வசனங்கள் அமைந்திருக்கின்றன.
   
 'அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கின்றான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்' (அல்-அன்ஃபால்:30)
   
 'அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன்' (அத்தாரிக்86:16,17)
  
  'நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றக் கூடியவன்' (அந்நிஸா4:142)
    
அல்லாஹ் சதி செய்யக்கூடியவனா என்று நம்மிடம் வினவப்பட்டால், ஆம் என்றோ அல்லது இல்லையென்றோ பொதுப்படையாகக் கூறக்கூடாது. மாறாக யார் சதிசெய்யப்படத் தகுதியானவர்களோ அவர்களுக்கு சதி செய்யக் கூடியவன்' என்றே கூற வேண்டும். அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

2. அல்லாஹ்வுடைய பண்புகள் இரண்டு வகைப்படும்.

    அ) (الثبوتية) அத்துபூதிய்யா: அதாவது அல்லாஹ் தனக்கு இருப்பதாகக் கூறிய பண்புகள் (உதாரணம்: வாழ்வு, அறிவு, சக்தி) அவை அல்லாஹ்வுக்கு இருக்கின்ற பண்புகள் என்று நம்ப வேண்டும்.

    
ஆ) (السلبية) அஸ்ஸலபிய்யா: அல்லாஹ் தனக்கு என்று மறுத்த பண்புகள் (உதாரணம்: அநீதி இழைத்தல்)
இப்படிப்பட்ட அவனுக்கு இருக்கக் கூடாத பண்புகளை மறுக்க வேண்டும். அதே நேரம் அதற்கு எதிரான பண்பு பூரணமான முறையில் அவனுக்கு இருக்கிறது என்று நம்ப வேண்டும்.
    உதாரணமாக,
    
'உமது இரட்சகன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்' (அல்கஹ்ஃபு18:49) என்ற வசனத்தைக் குறிப்பிடலாம்.
    
இங்கு அநீதி இழைத்தல் என்ற ஸிஃபத்தை மறுக்கின்ற அதே நேரம் அவனுக்கு பூரணமாக நீதி வழங்குதல் என்ற பண்பு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

3. அல்லாஹ்வுக்கு இருக்கக்கூடிய பண்புகள் (الصفات التبوثية) இரண்டு வகைப்படும்.
    
அ) அவனுடன் எப்போதும் இருந்து கொண்டிருக்கக்கூடிய பண்புகள் (உதாரணம்: கேள்வி, பார்வை) இதற்கு அரபியில் (الذاتية) தாதிய்யா என்று சொல்லப்படும்.
    
ஆ) அவன் நாடினால் செய்யவும், நாடினால் செய்யாமல் இருக்கவும் முடியுமான அவனுடைய செயல்களோடு தொடர்பான பண்புகள் (உதாரணம்: அல்லாஹ் வருவான், இறங்குகிறான்) இதற்கு அரபியில் (الفعلية) ஃபிஃலிய்யா என்று சொல்லப்படும்.
    
சிலவேளைகளில் ஒரே ஸிஃபத் பிஃலிய்யாவாகவும் தாதிய்யாவாகவும் இருக்கும். உதாரணம்: (கலாம்) பேசுதல்.

4. ஒவ்வொரு ஸிபத் பற்றியும் பின்வரும் மூன்று கேள்விகள் எழுகின்றன.

    1. அல்லாஹ்வுடைய ஸிஃபத்து யதார்த்தமானதா? அது ஏன்?
    2. அல்லாஹ்வுடைய ஸிஃபத்தை விவரிக்க முடியுமா? ஏன்?
    3. அதற்கு படைப்பினங்களின் ஸிஃபத்துக்களைக் கொண்டு உதாரணம் கூற முடியுமா? ஏன்?

முதலாவது கேள்விக்கான பதில்:
    
ஆம்! அல்லாஹ்வின் ஸிஃபத்துக்கள் யதார்த்தமானவை. அரபு மொழியில் ஒரு சொல் பயன்படுத்தப்பட்டால் அதனுடைய யதார்த்தமான கருத்தில் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதே அடிப்படை விதி. அது அல்லாத வேறு அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு சரியான ஆதாரம் வேண்டும்.

இரண்டாவது கேள்விக்கான பதில்:
    
அல்லாஹ்வுடைய பண்புகளை விவரிக்க முடியாது. 'அவனை அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள மாட்டார்கள்' (தாஹா20:110) என்று அல்லாஹ் கூறுகிறான்.

    அவனுடைய ஸிஃபத்துக்கள் பற்றி அறிவால் அறிந்து கொள்ள முடியாது.
மூன்றாவது கேள்விக்கான பதில்:
   
 அவனது பண்புகள் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக மாட்டாது.
'அவனைப் போல் எதுவும் இல்லை' (அஷ்ஷுரா26:11) என்று அல்லாஹ் கூறுகிறான்.
    
அல்லாஹ் மிக உயர்ந்த பண்புகளுக்கு சொந்தக்காரன் என்ற வகையில் அவனைப் படைப்பினங்களுக்கு ஒப்பிட முடியாது.
    
உதாரணம், விவரனம் இரண்டுக்குமிடையில் உள்ள வித்தியாசம்:

    
அல்லாஹ்வுடைய கை மனிதனுடைய கையைப் போன்றது என்று கூறுவது உதாரணம் கூறுவதாகும்.

அல்லாஹ்வுடைய கை இப்படிப்பட்டது என்று குறிப்பிட்ட ஒரு அமைப்பை அதற்கு உருவாக்குவது விவரிப்பதாகும்.
இவை இரண்டுமே கிடையாது.

நாலாவது அடிப்படை:

    அல்லாஹ்வுடைய பண்புகளை மறுப்போருக்கு மறுப்புச் சொல்லுதல்:
    அல்லாஹ்டைய பண்புகளில் அல்லது திருநாமங்களில் எதையாவது மறுப்போர் அல்லது குர்ஆன் ஹதீஸில் வந்துள்ளவற்றைத் திரிவுபடுத்துவோர்(المعطلة) முஅத்திலா என்றும் (المؤولة) முஅவ்விலா என்றும் அழைக்கப்படுவர்.

இவர்களுக்குப் பொதுவாக நாம் சொல்லும் மறுப்பு:

    நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அல்குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமானதாகும். ஸலஃபுகள் சென்ற வழிக்கு முரணானதாகும். மேலும் உங்களுடைய கூற்றுக்கு எந்த பலமான ஆதாரமும் இல்லை என்பதாகும்.

மூலம்: அஷ்ஷெய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன்
 தமிழில்: அபூஅம்னா முபாரக் ஸலஃபி

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

தமிழகத்தில் இசுலாம் - இசுலாம் II




பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே இசுலாம் மதத்தைப் பற்றிய செய்திகள் தமிழகத்தில் அறியப்பட்டிருந்தன. இசுலாம் மார்க்கத்தைப் பற்றிய சிந்தனை பலருக்கு இருந்தது. சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் ஆகிய பாண்டிய அரசர்கள் தங்களுக்குள் போராடிக் கொண்டு வடஇந்தியாவிலிருந்து மாலிக்காபூரை அழைத்தனர். மாலிக்காபூரின் வரவு தமிழகத்தில் இசுலாமிய ஆட்சிக்கு வழி வகுத்தது. இதன் விளைவாக இசுலாம் தமிழகத்தின் தென் மாநிலங்களில் ஓங்கிப் பரவியது. மதுரையை ஆண்ட சுல்தான் இபுராகிம், தமிழர்கள் இசுலாம் மதத்தில் சேரப் பெரிதும் வழி வகுத்தான். காயல்பட்டினம், கீழக்கரை, இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் வணிகம் செய்துக் கொண்டிருந்த பலர் இசுலாம் மதத்தைத் தழுவினர். படிப்படியாக இசுலாம் தமிழகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சமயமாக மாறியது.
இசுலாமியத் தமிழர்
இசுலாம் மதத்தின் உயர் கொள்கைகள் சமத்துவம், சகோதரத்துவம் என்பன. வைதிக சமயத்தின் பல சமயக் கடவுட் கோட்பாடு, பிற சமய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக் கொடுமை ஆகியன தமிழர்களுடைய உள்ளத்தில் வருத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தபோது சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதித்த இசுலாம் தமிழர்களைக் கவர்ந்தது. தமிழர்களே இசுலாமியர்களாக மாறியதால் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஒரு புதிய மதமாக இல்லாமல் ஒரு மார்க்கமாகவே திகழ்ந்தது என்றும் கூறுவர். மஸ்தான் சாகிபு பாடல்களும், தாயுமானவர் பாடல்களும் பொது நிலையிலும் வேறுபாடு காண இயலாது.
"குணங்குடியான் தனைப் பரவினார்க்குப்
பவப் பிணி நீங்கும்"
அதாவது, குணங்குடி மஸ்தான் சாகிபை வழிபட்டவர்க்குப் பிறவியாகிய நோய் நீங்கும் என்று இந்து சமயத்தைச் சார்ந்த சரவணப்பெருமாள் ஐயர் பாடுகின்றார். "குருவினொடு தெய்வம் நீயே" என வேங்கடராய பிள்ளைக்கவிராயர் போற்றுகின்றார். குணங்குடி மஸ்தான் சாகிபு போன்ற இசுலாமியத் தமிழர் பலர் வாழ்ந்த பெருமைக்குரியதாகத் தமிழ்நாடு திகழ்ந்தது.
இசுலாமியர் பணிகள்
தமிழில் காப்பியங்கள், மெய்ஞ்ஞான இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பலவகையான படைப்புகளை இசுலாமியர் படைத்தனர். பல புதிய வகையான இலக்கியங்களையும் உருவாக்கினார். இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் எண்ணிக்கையில் பல நூறாகத் திகழ்கின்றன. அரபு, பாரசீக, உருதுச் சொற்கள் தமிழில் நிறையக் கலந்ததற்கு இசுலாமே காரணமாகும். கிஸ்தி, மகசூல், பசலி, பட்டா, மிராசு, தாசில்தார், மனு, கஜானா, ஜமாபந்தி, வாரிசு, நமுனா போன்ற நிர்வாகச் சொற்கள் பல தமிழில் வந்து கலந்ததற்கு இசுலாமிய சமயம் தழுவிய ஆட்சிகள் காரணமாகும்.
  • காப்பியங்கள்
  • இசுலாமியக் காப்பியங்களில் மிகவும் புகழ்பெற்றதுசீறாப்புராணமாகும். இதனை இயற்றியவர் உமறுப்புலவர் ஆவார். வள்ளல் சீதக்காதியின் தூண்டுதலால் உமறுப்புலவர் இந்தக் காப்பியத்தை இயற்றினார். தமிழிலக்கிய வரலாற்றில் பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரை பெரும் காப்பியங்கள் தோன்றவில்லை. இந்தக் குறையை நீக்கும் வகையில் பதினேழாம் நூற்றாண்டில் சீறாப்புராணம் தோன்றியது. இந்நூல் 5027 பாடல்களைக் கொண்டது. சீறாப்புராணத்தைத் தவிர குத்துபநாயகம், திருக்காரணப்புராணம், தருமணிமாலை ஆகிய காப்பியங்களும் தமிழில் தோன்றின.
    சிற்றிலக்கியங்கள்
    தமிழில் அந்தாதி, உலா, கலம்பகம், கோவை, மாலை, பரணி, தூது போன்ற சிற்றிலக்கியங்கள் உள்ளன. இந்தச் சிற்றிலக்கியங்களுக்குரிய மரபைத் தழுவி இசுலாமியரும் பலப்பல சிற்றிலக்கியங்களைத் தந்துள்ளனர். மக்காக் கலம்பகம், மதினாக் கலம்பகம், நாகூர்க் கலம்பகம் போன்ற கலம்பகங்களும், நபிநாயகம் பிள்ளைத் தமிழ், முகைதீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் போன்ற கோவை தொகுப்பு நூல்களும் நாகை அந்தாதி, மதீனத்து அந்தாதி, திரு மக்கா திரிபு அந்தாதி ஆகிய அந்தாதிகளும், இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள் படைத்த அந்தாதிச் செல்வங்களாகும். இவற்றைத் தவிர கிஸ்சா, படைப்போர், மசலா, முனா ஜாத்து, நாமா என்ற புதிய வகைச் சிற்றிலக்கியங்களையும் இசுலாமியத் தமிழர் படைத்தனர். கிஸ்சா என்பது கதை சொல்லுதல் என்ற பொருள் கொண்டதாகும். படைப்போர் என்பது வீரப்போர்ப்பாட்டு ஆகும். மசலா என்பது வினா விடை வடிவமான இலக்கியமாகும். முனாஜாத்து என்பது இறைவனோடு இரகசியமாகப் பேசுதல் என்ற பொருள் உடையதாகும். நாமா என்பது இறைவனின் பெருமையைப் பலபடப் பாடுவதாகும்
    Blogger Widgets

    Subscribe via email

    Enter your email address:

    Delivered by FeedBurner

    Jumma mosque, Vadamadurai