அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

வெள்ளி, 9 மார்ச், 2012

அரிய துஆக்கள்! - துஆக்கள்


அரிய துஆக்கள்
உணவு அபிவிருத்தி ஏற்பட வேண்டுமா? நீண்ட ஆயுளைப்பெற  வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஒரு நாளில் நூறு தடவை

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்வின் சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?
ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஹஜ் செய்த நன்மையைப் பெற விரும்புகின்றீர்களா?
ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?
அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்வின் திருப்தியைப் பெற விரும்புகின்றீர்களா?
ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா?
ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?
நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)
அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் தொழுகையாளியின் நன்மை  போன்று பெற விரும்புகின்றீர்களா?
விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?
யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மரணத்துக்குப் பின்னரும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?
ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பயனுள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா?

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله

லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?
சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களைக் காப்பாற்றுவாயாக!”

திங்கள், 5 மார்ச், 2012

அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள் -



Al Quran


1. "எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" .  (2:127)


2. "எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்."  (2:128)

3. "எங்கள் இறைவனே எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!". (2:201)

4."எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!"  (2:250)

5. எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! 25:74

6. "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!"  (2:286)

7. "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!  (3:8)

8. "எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்".  (3:9)

9. "எங்கள் இறைவனே!  நிச்சயமாக நாங்கள் (உன்மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!"(3:16)

10. "எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!"(3:53)

11. "எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக".  (3:147)

12. "எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" .  (3:191)

வியாழன், 1 மார்ச், 2012

அல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள் - திக்ரு


அல்லாஹ் கூறுகிறான்: -
“(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்” (அல் குர்ஆன் 7:205)
இந்த வசனத்தில் வசனம் மூலம் நாம் பெறும் படிப்பினைகள்: -
மேற்கண்ட வசனத்தில், திக்ரு செய்யும் போது மெதுவாகவும், பணிவோடும், உரக்கச் சப்தமின்றியும், அச்சத்தோடும் செய்ய வேணடும் என இறைவன் கட்டளையிட்டிருக்கிறான். ஆனால் சூஃபியாக்கள் திக்ரு செய்கிறோம் என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத பித்அத்தான ஹல்கா போன்றவைகளைச் செய்யும் போது ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும், இருந்து விட்டு அல்லாஹ்வை திக்ரு செய்ததாக எண்ணிக் கொள்கின்றனர்.
இதில் வேதனையான விசயம் என்னவென்றால் சூஃபியாக்கள் கொள்கையைப் பற்றித் தெரியாதவர்கள் கூட அறியாமையினால் தாங்களும் இறைவனை திக்ரு செய்வதாக எண்ணிக்கொண்டு இதுபோன்ற மஜ்லிஸ்களில் கலந்து கொள்கின்றனர். காரணம் என்னவெனில் அவர்கள் ஊரில் உள்ள பெரும்பாண்மையானவர்கள் இந்த மாதிரியான பித்அத்களைச் செய்வதினால் அவர்களும் இதையும் மார்க்கம் என்று கருதுகின்றனர். உதாரணமாக, இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நான் கூட சிறுவயதில் சூஃபியா கொள்கைகளைப் பற்றிய அறியாமையினால், எங்கள் ஊரில் பெரும்பாலோர் செய்வது போன்று, “ஹல்கா” என்ற பெயருடைய திக்ரு மஜ்லிஸ்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அல்லாஹ் என் போன்றவர்கள் அறியாமையினால் செய்த பாவங்களை மன்னித்தருள வேண்டும் என இறைஞ்சுகிறோம்.
இவர்கள் நபிவழிக்கு மாற்றமான பலவகையான திக்ரு முறைகளை செய்கிறார்கள். அவைகளில் தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் குறிப்பாக கூத்தாநல்லூர் போன்ற ஊர்களில் பிரபலமானவை ‘ஷாதுலிய்யா தரீக்கா’ மற்றும் ‘காதிரிய்யா தரீக்கா’ என்ற பிரிவுகளைச் சேர்ந்தவைகளாகும். இவர்கள் செய்யக்கூடிய இந்த வகையான திக்ரு முறைகளில் மார்க்கத்திற்கு முரணான ஏராளமான செயல்களைச் செய்கின்றனர். இந்த வகை திக்ரு முறைகளில் ஷாதுலிய்யா தரீக்காவில் இவர்கள் செய்யக்கூடிய திக்ரு முறையைப் பற்றி சற்று பார்ப்போம்.
ஷாதுலிய்யா தரிக்காவின் ஹல்கா (திக்ரு?) முறை: -
இதில் முதலில் இவர்கள் வட்டமாக அமர்ந்துக் கொள்கின்றனர். பின்னர் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்ற திக்ரை அந்த மஜ்லிஸின் தலைவர் கூறி ஆரம்பம் செய்ய அங்கு கூடியிருப்போர் அனைவரும் உரத்த குரலில் அதை கூறுகின்றனர். இவ்வாறு குறிப்பிட்ட எண்ணிக்கை வரை அவர்கள் கூறி முடித்ததும் அவர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒவ்வொருவரும் தமது பக்கவாட்டில் உள்ளவரிடம் கையைக் கோர்த்துக் கொண்டு, தத்தமது உடல்களை அசைத்தவராக ‘அல்லாஹ்’ ‘அல்லாஹ்’ என கூறுகின்றனர். பின்னர் அந்தக் கூட்டத்திலிருந்த சிலர் குழுவாக அமைத்துக் கொண்டு அரபிப் பாடல்களை ‘பைத்து’ என்று பாடுகின்றனர். அவ்வாறு பாடும் போது அன்றைய காலக்கட்டத்தில் வெளியாகியிருக்கும் சினிமாப் பாடலின் இராகத்திற்கேற்ப மெட்டு அமைத்துக் கொண்டு பாடுகின்றனர். அவ்வாறு பாடும் போது மற்றவர்கள் ‘அஹ்’ என்றும் ‘ஆஹ்’ என்றும் அந்த சினிமாப் பாடலின் இராகத்தில் அமைந்த அந்த அரபி பாடலுக்கு ஏற்றவாறு தமது உடலை அசைக்கின்றனர். இதில் வேதனை என்னவென்றால் அவ்வாறு ஆடும் போது ‘சுதி’ (அவர்கள் பாஷையில் ‘ஜதப்’ என்கின்றனர்) ஏற்றுவதற்காக சிலர் வேகமாக கையைத் தட்டுகின்றனர். பின்னர் அவர்கள் அமர்ந்துக் கொண்டு அனைவரும் உரத்தகுரலில் ‘யா லத்திஃப்’ என்று கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு சில ஆயத்துக்களை ஓத அக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் பாத்திஹா ஒதி அந்த திக்ரு? முறையை நிறைவு செய்கிறார்.
அல்லாஹ்வோ, அவனது ரஸுலோ காட்டித் தராத நூதன அனுஷ்டானங்களைச் செய்யும் இவர்கள் ‘அல்லாஹ்’ என்ற அழகிய திருநாமத்தை கூட ‘ஆஹ்’ என்றும் ‘அஹ்’ என்றும், ‘ஹு’ என்றும் திரித்து தனித்தனியாக உச்சரித்து, திக்ரு செய்வதயையே கேலிக் கூத்தாக்குகின்றனர். அல்லாஹ்வின் பெயரை இவ்வாறு திரித்துக் கூறுபவர்களைப் பற்றி குர்ஆனிலே அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கின்றான்.
அல்லாஹ் கூறுகிறான்: -

“அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன: அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களைத் (திரித்துத்) தவறாகப் பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டுவிடுங்கள்- அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்” 
அல்குர்ஆன் (7:180)
ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த மக்கத்து நிராகரிப்பாளர்களின் செயலான கைத் தட்டுதலை வணக்கமாக கருதுபவர்களைப் பற்றி அல்லாஹ் கடுமையாக எச்சரித்திருக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: -

‘அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) ‘நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள’ (என்று).”
 (அல் குர்அன் 8:35)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -
“மனதிற்குள் அடக்கமாகப் பிரார்த்தனை (திக்ர்) செய்யுங்கள்: நீங்கள் செவிடனையோ மறைவானவனையோ பிரார்த்திக்க வில்லை. எல்லாவற்றையும் உங்களுடன் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கின்ற இறைவனிடம் தான் பிரார்த்தனை செய்கின்றீர்கள்” அறிவிப்பவர்: அபூமுஸா அல் அஷ்அரி (ரலி) , ஆதாரம்: புகாரி
இவர்கள் செய்யக்கூடிய இந்த வகையான திக்ருமுறைகளை அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கற்றுத்தரவில்லை. மாறாக அல்லாஹ்வினால் முழுமையாக்கப்பட்ட மார்க்கத்தில் இவ்வாறு புதிய அமல்களை உருவாக்குபவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -
‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும்செய்தால் அது நிராகரிக்கப்படும்’
“(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத்
அல்லாஹ்வின் பெயரை திரிப்போர்களின் கூட்டத்தை விட்டு தவிர்ந்தவர்களாக, அல்லாஹ் மற்றம் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில், அச்சத்தோடும், அமைதியாகவும், உரக்க சப்தமில்லாமலும் அல்லாஹ்வை திக்ரு செய்யும் நல்வழியில் நம்மை சேர்த்தருள அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
Blogger Widgets

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Jumma mosque, Vadamadurai